கிராம குடிசை

கிசோர் கவி
12ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படம் ஒன்று இருந்தது அதில் கிராமத்து மனிதர் ஒரு உரல் மீது உட்கார்ந்து இருக்கிறார். பின்னாடி ஒரு மண் சுவரும் சுவருக்கு பின்னால் ஒரு பெண்மணி தன் குழந்தையோடு நின்றுகொண்டு இருக்கிறாள். இதை பார்த்ததும் இந்த மாதிரி தான் அமைதியான ஒரு குடிசை போட்டு வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 
 
பழைய நினைவு நியாபகத்திற்க்கு வருகிறது. மாமா வயலுக்கு சென்றேன் படத்தில் பார்த்தது போலவே இருந்தது. அந்த குடிசையின் உள்ளே இருந்த போது நான் படத்தை பார்த்த போது எந்த உணர்வு வந்ததோ அதே உணர்வை அனுபவிக்க முடிந்தது. அது மழை காலம் என்பதால் மூன்று மணி போல இருக்கும் இடி மின்னலுடன் மழை பெய்தது. படுத்துகிடந்து அந்த மழையை ரசித்து கொண்டுயிருந்தேன். மழையை பார்த்து பார்த்து கண்ணு பூத்துபோய்விட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் மழை நீரானது குடிசைக்குள் வர ஆரம்பித்துவிட்டது. அதாவது மண்தரை என்பதால் நீரானது நனைந்து நனைந்து குடிசைக்குள் உள்ள மண்ணும் மழை நீரால் நனைந்து விட்டது. கீழே படுத்துகிடந்து மழையை ரசித்தவன் இப்போது நின்றுகொண்டு இருக்கிறேன். அந்த நேரத்தில காங்கிரேட் தரை மட்டும் இருந்தால் ஈரம் உள்ளே வராமல் இருக்குமே என்ற எண்ணம் வந்தது. 
 
இதே போல பல குறைகள் இருப்பதால் தான் மனித சமுகம் ஆனது அடுத்தடுத்த நகர்வுக்கு சென்றுள்ளது. இப்படி குறைகள் என ஒதுக்கபட்ட வீடு தான் மனதிற்க்கு மகிழ்ச்சி தருகிறது என்பது எந்த வகையான எண்ணங்கள் என தெரியவில்லை. குடிசையில் வாழ்ந்த போது குறைகளாக தெரிந்த பல விசயங்கள் காலமாற்றதால் அது தான் ரசனை என மனம் எண்ணிகொள்ள என்ன காரனமோ.